search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடத்தப்பட்ட குழந்தை"

    திருமலையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தையை, திருப்பதி போலீசார் 24 மணிநேரத்தில் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். #Tirupati #BabyRescued
    திருப்பதி:

    திருமலையில் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் தூங்கி கொண்டிருந்த பெற்றோரிடம் இருந்து, 3 மாத ஆண் குழந்தையான வீராவை அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கடத்தி சென்றார். குழந்தையை காணாதது கண்டு, பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவர்கள், திருமலை போலீசில் புகார் செய்தனர்.

    திருமலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, தீவிர விசாரணை நடத்தினர். அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, குழந்தையை கடத்தி சென்ற பெண்ணின் அடையாளத்தை கண்டறிந்தனர்.

    இதுபற்றி திருமலை போலீசார், திருப்பதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பெண், திருமலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வந்த துளசி என்பது தெரியவந்தது. அவருடைய சொந்த ஊர், சித்தூர் மாவட்டம் கார்வேட்டி நகரம் ஆகும். அவரின் செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்தபோது, அது திருப்பதி மங்களம் குடியிருப்பு பகுதியை காண்பித்தது.

    திருப்பதி மங்களம் குடியிருப்பு பகுதிக்குச்சென்ற திருப்பதி போலீசார், அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு விசாரித்தனர். அங்கு, கைக்குழந்தையோடு ஒரு பெண் தங்கியிருப்பது தெரியவந்தது. அந்த பெண்ணை போலீசார் பிடித்தனர். அவரிடம் இருந்த ஆண் குழந்தையை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    பிடிப்பட்ட துளசியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    துளசி, போலீசாரிடம் கூறியதாவது:-

    எனக்கும் கார்வேட்டிநகரத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் ஆனது. எங்களுக்கு தலைப்பிரசவத்தில் ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தை திடீரென இறந்து விட்டது. 2-வதாக நான் கர்ப்பம் ஆனேன். அந்த குழந்தையும் இறந்து விட்டது. இதனால் என்னை விட்டு, கணவர் பிரிந்தார்.

    எனக்கு பெற்றோர் இல்லாததால், திருவள்ளூரை அடுத்த பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள என்னுடைய பாட்டி வீட்டில் தங்கி வசித்தேன். அங்கு, எனக்கு தனிமை வாட்டவே, வேலைத்தேடி திருமலைக்கு வந்தேன். அங்குள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்தபடி, இரவில் சென்று ஏதேனும் ஒரு குழந்தையை கடத்த திட்டமிட்டேன்.

    அதன்படி சம்பவத்தன்று அதிகாலை 4 மணியளவில் திருமலையில் உள்ள எஸ்.வி.ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் அருகில் படுத்துத்தூங்கி கொண்டிருந்த ஒரு தம்பதியரிடம் இருந்து ஆண் குழந்தையை கடத்தினேன். என் செல்போன் அழைப்பு மூலமாக 24 மணிநேரத்தில் திருப்பதி போலீசார் என்னை கண்டுபிடித்து விட்டனர்.

    மேற்கண்டவாறு போலீசாரிடம் துளசி கூறினார்.

    இதையடுத்து துளசியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து குழந்தையை மீட்டு, அக்குழந்தையின் பெற்றோரான மாவீரன், கவுசல்யாவிடம் ஒப்படைத்தார்.

    அதற்கு அவர்கள் கண்ணீர் மல்க போலீசாருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.  #Tirupati #BabyRescued

    ×